தேர்தலில் ஸ்டாலினுக்கு ஜீரோதான் கிடைக்கும்; இபிஎஸ்

சென்னை: தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல,வெறும் ஜீரோதான் கிடைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற அரசு, மத்திய அரசு கேட்டதைத் தரவில்லை என்று வாய்ஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறது. தங்களுடைய இயலாமையை, தோல்வியை மறைக்க, மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்திற்கு தரவில்லை; ரயில்வே திட்டங்கள் வரவில்லை என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களுக்கு நிஜமாக அல்வா கொடுக்கும் பம்மாத்து வேலையை அரங்கேற்றி வருகிறது.

ஏமாற்று மாடல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவோம். திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின்.

தோல்வி நிச்சயம்

‘பேஸ்மென்ட் வீக் – பில்டிங் ஸ்டிராங்’ என்று ஒரு படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல, இவருடைய ஆட்சியே ஆட்டம் கண்டு இன்றோ, நாளையோ என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு, கண்ணாடி முன் நின்று வெற்றி, வெற்றி என்று இம்சை அரசின் 23ம் புலிகேசி போல் திரு. ஸ்டாலின் கூக்குரல் இட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, தமிழக மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். வரும் சட்டசபை தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை திரு. ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார்.

ஜீரோதான்

அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் முதல்வர் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா? அப்படி அவர் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல, வெறும் ஜீரோதான். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

துளி கூட இல்லை

மற்றொரு பதிவில் இபிஎஸ் கூறியிருப்பதாவது: மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் திரு. செந்தில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை.

இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது?
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வக்கில்லாத ஒரு கையாலாகாத முதல்வர் ஸ்டாலினின் திமுக ஆட்சி இங்கு நடப்பதால் தானே? தனது ஆட்சியில், ஒரு சாமானியர் காலையில் தனது டீக்கடையைப் பாதுகாப்புடன் திறக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான நிலை? இதற்கு உள்ளபடியே ஸ்டாலின் தலைகுனிய வேண்டும். தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான முதல் படி இந்த திமுக அரசை அடியோடு வீழ்த்துவதே ஆகும். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

Source link