ஏப்ரல் 9 அன்று கேரள மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றப் பலமுனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் எனத் தீவிரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இதன் காரணமாக, கேரளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளத்தில் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
தற்போது மிக விரைவில் தேர்தல் வரவுள்ளதால் அடுத்தகட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள, இன்று கேரளத்திற்கு வருகை தருவதாக ராகுல்காந்தி திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தி உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், ராகுல் காந்தியின் கேரள மாநில பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில், கோழிக்கூடு வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோழிக்கூடு பகுதியில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொள்ள இயலாத நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கார்கே கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், ராகுல்காந்தியின் தாயார் சோனியாகாந்திக்கு பருவ நிலை மாற்றம் காரணமாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கவலை கொள்ளும் அளவிற்கு ஏதும் பிரச்சனை இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும், அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
