-டில்லி சிறப்பு நிருபர்-
அரசு நிகழ்ச்சிகளில், தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றி, 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது நாடு முழுவதும் விழாக்களாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, அரசு நிகழ்ச்சிகளில், தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட வேண்டும் எனக் கூறிய மத்திய உள்துறை அமைச்சம், இது தொடர்பான உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்து இருந்தது.
இதை எதிர்த்து, முகமது சயீத் நுாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, ”அறிவுறுத்தல் என்ற பெயரில் மக்களை, வந்தே மாதரம் பாடலைப் பாடக் கட்டாயப்படுத்தும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, பாட மறுப்பவர்கள், எழுந்து நிற்காதவர்கள் மீது சமூக ரீதியான அழுத்தம் தரப்படுகிறது. தேசிய கீதத்துக்கு முன்பாக பாடுவதால், அதன் முக்கியத்துவம் குறையும்,” என, வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:வந்தே மாதரம் பாடல் பாடுவது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு அறிவுறுத்தல் மட்டுமே. இதைப் பின்பற்றாதவர்களுக்கு எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை.
இதுபோன்ற அறிவுறுத்தல்கள் கட்டாயமாக்கப்படும் போதோ அல்லது அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதோ, இதில் நீதிமன்றம் தலையிட முடியும்.
சமூகத்தில் தேவையற்ற பாகுபாடு காட்டப்படும் என்ற அச்சத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தற்போதைய நிலையில், விசாரணைக்கு தேவையற்றது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
