ரோகித் வழியில் அமேலியா: கேப்டனாக 2 சதம் விளாசினார்

கிறைஸ்ட்சர்ச்: ‘டி-20’ அரங்கில் கேப்டனாக 2 அல்லது அதற்கு மேல் சதம் விளாசியவர்கள் பட்டியலில் ரோகித், சமாரி, மெக் லானிங் உள்ளிட்டோருடன் இணைந்தார் அமேலியா கெர்.

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த பெண்களுக்கான 5வது ‘டி-20’ போட்டியில், நியூசிலாந்து அணி (194/6) 92 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை (102/9) வீழ்த்தியது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 4-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

இப்போட்டியில் பேட்டிங்கில் அசத்திய நியூசிலாந்து கேப்டன் அமேலியா கெர், 55 பந்தில் 105* ரன் (1X6, 19X4) விளாசினார். இது, கேப்டனாக இவரது 2வது சதம். ஏற்கனவே ஹாமில்டனில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் (பிப். 26) இவர், 101* ரன் எடுத்திருந்தார். சர்வதேச ‘டி-20’ அரங்கில், கேப்டனாக 2 அல்லது அதற்கு மேல் சதம் விளாசியவர்கள் பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மா (3 சதம்), பாகிஸ்தானின் பாபர் ஆசம் (3), இலங்கையின் சமாரி (3), ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் (2), வெஸ்ட் இண்டீசின் ஹேலி மாத்யூஸ் (2) ஆகியோருடன் இணைந்தார் அமேலியா.

தவிர, சர்வதேச ‘டி-20’ வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய நியூசிலாந்து வீராங்கனையானார் அமேலியா கெர். இவர், 52 பந்தில் சதம் கடந்தார். இதற்கு முன், 2018ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டான்டனில் நடந்த போட்டியில் நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் 55 பந்தில் சதமடித்திருந்தார்.

Source link