வெளிநாட்டு நிதி தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டம்; லோக்சபாவில் நிறைவேற்றம்

புதுடில்லி: எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது. இதன்படி, வெளிநாட்டு நிதியை பயன்படுத்தி கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

லோக்சபாவில் , பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், அன்னிய செலாவணி ஒழுங்குமுறை திருத்த மசோதா – 2026ஐ அறிமுகம் செய்து பேசியதாவது:வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், அந்த நிதி சரியான முறையில் பயன் படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்த திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

வெளிநாட்டு பங்களிப்பை பயன்படுத்தி கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோர் மற்றும் அந்த நிதியை தனிப்பட்ட ஆதாயத்திற்காக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்த திருத்த மசோதாவுக்கு காங்., திரிணமுல் காங்., – எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படுவதால், இது ஆபத்தானது’ என, அவர்கள் குற்றஞ்சாட்டினர். விவாதத்திற்கு பின், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை வழிநடத்திய கிருஷ்ணா பிரசாத் தென்னெட்டி, திருத்த மசோதா மீது ஓட்டெடுப்பு நடத்தினார். இது, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.

Source link