தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிக்கு 5 தொகுதிகள், தேமுதிக 10 தொகுதிகள் என 66 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 7 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்ற கட்சியினர் போட்டியிடவுள்ளனர். இதனிடையே, திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு திமுக இன்று (25-03-26) தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக மனிதநேய ஜனநாயகக் கட்சின் தலைவர் தமிமுன் அன்சாரியும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸ், எஸ்.டி.பி.ஐ தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அதனை தொடர்ந்து மூன்று கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, மனிதநேய ஜனநாயகக் கட்சி மற்றும் முக்குலத்தோர் புலிப்படை, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மூன்று கட்சிகளும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
