டெஹ்ரான்: மேற்காசியாவின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த செலன் என்ற கச்சா எண்ணெய் கப்பலுக்கு அனுமதி மறுத்து ஈரான் திருப்பி அனுப்பியது.
விலை உயர்வு
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு, முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கிறது. இது ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா – -இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பின், ஈரான் இந்த கடல் பாதையை முடக்கியுள்ளது.
இதன் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு குறைந்த அளவில் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதித்துள்ளது.
எச்சரிக்கை
மேலும் சமீபத்தில் ஜலசந்தியை கடக்க 18.8 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கும் முறையை ஈரான் ராணுவம் அறிமுகப்படுத்தியது. இந்த பணத்தை போருக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், செலன் எனும் கச்சா எண்ணெய் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்துக்கு சென்று கொண்டிருந்தது.
அனுமதி பெறாமல் அந்த கப்பல் கடக்க முயன்றதாக கூறி, ஈரான் புரட்சிகர ராணுவம், அதை தடுத்து நிறுத்தி எச்சரித்தது.
இதையடுத்து கப்பல் மீண்டும் பாரசீக வளைகுடாவுக்கே திரும்பியது. இந்த தகவலை காபூலில் உள்ள ஈரான் துாதரகம் உறுதி செய்துள்ளது.
