அக்னி வீரர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு: மாநில அரசுகளுக்கு உள்துறை கடிதம்

ஹமீர்பூர்: ‘அடுத்த ஆண்டு பணி நிறைவு செய்யும் அக்னி வீரர்களுக்கு, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என, அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

நம் நாட்டின் முப்படைகளில் இளைஞர்களை நான்கு ஆண்டுகள் தற்காலிகமாக பணியமர்த்தும், ‘அக்னிபத்’ திட்டம் மத்திய அரசால் துவங்கப்பட்டது. இதில், தேர்வானவர்கள், ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுகின்றனர்.

பணி முடிவில், சிறப்பாக செயல்படும் 25 சதவீத வீரர்கள் நிரந்தரமாக்கப்படுவர். மீதமுள்ளவர்கள் பணியில் இருந்து விலக்கப்படுவர்.

இவர்களுக்கு, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சேர, மத்திய அரசு இட ஒதுக்கீடு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஹிமாச்சல பிரதேச ராணுவ வீரர் நலத்துறையின் முன்னாள் இயக்குநர் பிரிகேடியர் மதன் ஷீல் சர்மா கூறியதாவது:

நான்கு ஆண்டு சேவையை 2027ல் நிறைவு செய்யும் அக்னி வீரர்களின் மறுவாழ்வுக்காக, பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் ஒதுக்கீடு செய்யுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.

வன காவலர்கள், சுரங்க காவலர்கள், கான்ஸ்டபிள்கள், தீயணைப்பு வீரர்கள், குதிரைப்படை வீரர்கள், சிறை காவலர்கள், சிறப்பு போலீஸ் அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை போன்ற பணிகளில் இந்த இடஒதுக்கீடு வழங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹரியானா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள், அக்னி வீரர்களுக்கு போலீஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஏற்கனவே இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளன.

Source link