புதிதாக 100 விமான நிலையங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

– நமது சிறப்பு நிருபர் –

நாடு முழுதும் 100 விமான நிலையங்கள், 200 ‘ஹெலிபேடுகள்’ உருவாக்க, மேம்படுத்தப்பட்ட, ‘உடான்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இது தவிர, 1,800 கோடி ரூபாய் செலவில், ஐ.வி.எப்.ஆர்.டி., எனப்படும், வெளிநாட்டவர் வருகை, விசா, குடியேற்ற நடைமுறைகளை கண்காணிக்கும் திட்டத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் ஒப்பதல் அளிக்கப்பட்டது.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குறிப்பாக, பிராந்திய வான்வழி இணைப்பை மேம்படுத்தும், ‘உடான்’ திட்டத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டது.

இதன் மூலம், நாடு முழுதும் 100 புதிய விமான நிலையங்கள், 200 ஹெலிபேடுகள் உருவாக்கப்படவுள்ளன.

மலை பிரதேசங்கள், வடகிழக்கு மாநிலங்கள், தீவுப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இந்த திட்டத்திற்கு முன்னுரிமை தரப்படவுள்ளது. இதற்காக 28,840 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தில், 80 முதல் 90 சதவீத அளவுக்கு மத்திய அரசு நிதி வழங்கும். விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேடுகள் இயக்குவதற்காக வழங்கப்படும் இந்த ஆதரவு நிதி, ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும்.

இதில், விமான நிலையங்கள் கட்டுவதற்காக 12,000 கோடி ரூபாயும், ஹெலிபேடுகள் அமைக்க 3,600 கோடி ரூபாயும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 – 27ம் நிதியாண்டு முதல் 2035 – 36ம் நிதியாண்டு வரை 10 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

அதே போல், 1,800 கோடி ரூபாய் செலவில், ஐ.வி.எப்.ஆர்.டி., எனப்படும் வெளிநாட்டவர் வருகை, விசா, குடியேற்ற நடைமுறைகளை கண்காணிக்கும் திட்டத்தை, வரும் ஏப்., 1 முதல் 2031, மார்ச் 31 வரை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

விசா வழங்குதல் மற்றும் வெளிநாட்டவர் வருகை பதிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஒருங்கிணைப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

‘மொபைல் போன்’ வழி சேவைகள், தானியங்கி கியோஸ்க்குகள் மற்றும் இ – கேட்கள் மூலம் பயணியர் நடமாட்டம் எளிதாக்கப்படும்.

தற்போது 13 முக்கிய விமான நிலையங்களில் தானியங்கி இ – கேட்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் குடியேற்ற சோதனைகள் 3 நிமிடங்களில் இருந்து 30 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ”நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும். அத்துடன், பயணியருக்கு தடையற்ற சேவையை உறுதி செய்யும்,” என்றார்.

Source link