கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கிறது தி.மு.க., தலைமை

சென்னை: கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை, தி.மு.க., தலைமை இன்று அறிவிக்க உள்ளது.

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,விற்கு, 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, எஸ்.டி.பி.ஐ.,, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு, தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இக்கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என, நேற்று மாலை, தி.மு.க., அலுவலகத்தில் பேச்சு நடத்தப்பட்டது.

தே.மு.தி.க., தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றுள்ள, அக்கட்சி பொருளாளர் சுதீஷ், மாநில துணைச் செயலர் பார்த்தசாரதி உள்ளிட்ட ஐந்து பேர் பங்கேற்றனர். ஆனால், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை, தி.மு.க., தலைமை இன்று அறிவிக்க உள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுக்கு பின், தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் கூறியதாவது:

தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில், எங்கள் விருப்பமான தொகுதிகள் குறித்து கேட்டோம். அதில், 70 சதவீதம் அளவிற்கு, தொகுதிகளை தர தி.மு.க., முன்வந்தது. எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என, கேட்டோம். அதனால், இன்று காலை மீண்டும் பேச்சு நடத்த உள்ளோம். காலை 11:00 மணிக்குள் தொகுதிகள் பட்டியல், கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவிடம் ஒப்படைக்கப்படும்.

மயிலாப்பூர் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தி.மு.க., கூட்டணியில் அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு, அதிக தொகுதிகள் வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தே.மு.தி.க., இல்லை என்றால், 2011ம்ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்காது. அந்த தேர்தலில், பழனிசாமி எங்கிருந்தார் என்பது எங்களுக்கு தெரியும்; அவருக்கும் தெரியும்.

இவ்வாறு சுதீஷ் கூறினார்.

Source link