டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை காலி செய்ய மத்திய அரசு கெடு விதித்துள்ளது. அக்பர் சாலையில் எண் 24 என்ற முகவரியில் உள்ள அலுவலகம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தை வருகின்ற மார்ச் 28 க்குள் காலி செய்ய வேண்டுமென மத்திய அரசு கெடு விதித்துள்ளது. அதே போல, ரைசினா சாலையில் எண் 5 என்ற முகவரியில் அமைந்துள்ள காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைமை அலுவலகத்தையும் காலி செய்ய நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோட்லா மார்க் பகுதியில் கட்டப்பட்ட “இந்திரா பவன்” எனும் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தைக் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இருப்பினும், கட்சியில் அலுவல் பணிகள் அக்பர் சாலையில் அமைத்துள்ள பழைய அலுவலக கட்டடத்தில் நடைபெறு வந்தது. இந்நிலையில், அக்பர் சாலையில் அமைந்துள்ள அலுவலகம் மற்றும் ரைசினா சாலையில் அமைந்துள்ள அலுவலகம் என இரண்டு அலுவலகங்களையும் மார்ச் 28 தேதிக்குள் காலி செய்ய நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தத் தகவலைக் காங்கிரஸ் கட்சியின் முத்த நிர்வாகி ஒருவர், ஆங்கில ஊடகத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், இந்த சிக்கலை எதிர்கொள்ள சட்ட ரீதியிலான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. மேலும், காங்கிரஸ் மூத்த மாநிலங்களவை உறுப்பினரின் பெயரில் இந்த இடத்தை ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை வைக்கவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த கட்டிடங்கள் அரசு நிலத்தில் இருப்பதால், அலுவலகங்களை காலி செய்ய நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், 1977 ஆம் ஆண்டு முதல் இந்த கட்டடம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாகச் செயல்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
