சென்னை: ‘நான் மலைக்கள்ளன் இல்லை; இயற்கை காதலன்’ என, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தேர்தல் நேரத்தில் புலம்ப துவங்கியுள்ளதால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளையை தடுக்க முயற்சித்த அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டது மட்டுமின்றி, கொலை மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களும் ஐந்து ஆண்டுகளாக நடந்தன.
இதன் பின்னணியில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அவரது மகன் இருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டினர். இதை, மனோ தங்கராஜ் மறுத்து வந்தார். அவரை, ‘மலைக்கள்ளன்’ என்ற பெயர் சூட்டி, எதிர்க்கட்சியினர் அழைக்கத் துவங்கினர்.
அமைச்சர் கார் அந்த வழியாகச் சென்றால், ‘மலைக்கள்ளன் கார் செல்கிறது’ என மக்கள் கிண்டலடிக்கும் அளவிற்கு மனோ தங்கராஜ் பிரபலம் அடைந்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நேரத்தில், அவருக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சமூக வலைதள பக்கத்தில், கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க, தான் எடுத்த முயற்சிகள் குறித்த செய்திகளை, அமைச்சர் மனோ தங்கராஜ் பட்டியலிட வைத்துள்ளார்.
மேலும், ‘மலைக்கள்ளனுக்கும், இயற்கை காதலனுக்கும் வித்தியாசம் உள்ளது. மாவட்டத்தில் 44 ஆக இருந்த குவாரிகளை, நான்காக குறைத்தது அமைச்சர் மனோ தங்கராஜ் தான். அவர் உண்மையான இயற்கை காதலன்’ எனவும் அதில் பதிவிடப்பட்டு உள்ளது.
தேர்தல் நேரத்தில் பழைய சம்பவங்களை தோண்டி எடுப்பது போல, அமைச்சரே தன் ஆதரவாளர்கள் வாயிலாக, கனிமவள கொள்ளை குறித்த பிரச்னையை கிளறுவதால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
