ஆம் ஆத்மீ கட்சியின் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான ‘அரவிந்த் கெஜ்ரிவால்’ இந்த ஆண்டுக்குள் ஆளும் பாஜக அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறியுள்ளார். டெல்லியில் மார்ச் 23 அன்று சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கெஜ்ரிவால், ” 2026ம் ஆண்டுக்குள் மத்தியில் ஆளும் பாஜக அரசு கவிழ்ந்துவிடும். தற்போது நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் அதற்கு வழிவகுக்கும். குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கான தொடக்கப் புள்ளியாக அமையும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேசச் சந்தையில் நிலவும் நெருக்கடி சூழல் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு மிகப் பெரிய அளவிலான சரிவைக்கண்டுள்ளது. போர் சூழல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தும், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்க மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சஞ்சய் ராவத் போன்ற தலைவர்களுடன் இணைந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவின் பெரும்பான்மைக்குச் சவால் விடும் வகையில் ஓரணியில் திரண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மதுபான கொள்கை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் கெஜ்ரிவால், தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜகவைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கது.
