புதுடில்லி: இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து வருவதால், அந்நாட்டு மக்கள் பெரும் இன்னல்களை

புதுடில்லி: இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து வருவதால், அந்நாட்டு மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈரான் மக்களுக்கு உதவ முடிவெடுத்தனர்.

மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக உடலில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி முதல், வீட்டு உபயோக பொருட்கள், ரொக்கம், உணவு மற்றும் மருந்து பொருட்கள் வரை சேகரித்து அனுப்பி வைத்தனர்.

காஷ்மீர் மக்களின் இந்த பாசத்தை கண்டு நெகிழ்ந்த இந்தியாவுக்கான ஈரான் துாதரகம், அவர்கள் அனுப்பி வைத்த பொருட்களை புகைப்படம் எடுத்து அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தது.

அதில், ‘இக்கட்டான சூழலில் ஈரான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக காஷ்மீரை சேர்ந்த அன்பு நிறைந்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அன்பையும், உதவியையும் என்றும் மறக்க மாட்டோம். இதற்காக இந்தியாவுக்கு நன்றி’ என குறிப்பிட்டிருந்தது.

திடீரென இந்த பதிவை ஈரான் துாதரகம் நீக்கியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த இணையதள பயனாளர்கள், இந்தியாவின் பகுதி காஷ்மீர் என ஈரான் குறிப்பிட்டதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் அரசும் இந்த விவகாரத்தில் ஈரானுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே அந்த பதிவுகளை எல்லாம் ஈரான் நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Source link