சட்டம் – ஒழுங்கு சீரழிவு மக்களுக்கு பழகிவிட்டதா?

தமிழகத்தில் போதைப் பொருளே இல்லை!

சரவணன், வழக்கறிஞர், தி.மு.க., செய்தி தொடர்பாளர்

சாலையில் நடந்து செல்ல ஒருவர் அஞ்சினால், சட்டம் – ஒழுங்கு சரியில்லை என சொல்லலாம். குற்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்தால், சட்டம் – ஒழுங்கு சரியில்லை என சொல்லலாம். இந்த இரண்டு விஷயங்களும், தி.மு.க., ஆட்சியில் நடக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் ஆண்டுக்கு 1,400 முதல் 1,800 வரை குற்றச்சம்பவங்கள் நடந்தன.

தி.மு.க., ஆட்சியில், 1,400க்கும் குறைவான சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில்தான், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நடந்தது. சி.பி.ஐ., விசாரணைக்கு பிறகே, அ.தி.மு.க.,வை சேர்ந்த நபரை, போலீசார் கைது செய்தனர். இன்றைக்கு தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.

முன்பு வட மாநிலங்களை சேர்ந்த, ஆண் தொழிலாளர்கள், வேலை தேடி தமிழகத்திற்கு அதிகளவில் வந்தனர். இப்போது, தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக கருதும், வடமாநில பெண் தொழிலாளர்களும், இங்கு அதிகளவில் பணிக்கு வர துவங்கி உள்ளனர். சந்தேகம் இருந்தால், சென்ட்ரல் ரயில் நிலையம் போய் பார்த்து கொள்ளலாம்.

தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளதாக, ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதில் ஒரு சதவீத அளவிற்கு கூட உண்மை இல்லை. பா.ஜ., ஆளும் குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகம்தான், போதைப் பொருட்களின் விற்பனை மையம். விமான நிலையங்கள், துறைமுகங்கள் வாயிலாக, தமிழகத்திற்குள் போதைப் பொருட்கள் வருகின்றன. இதற்கு மத்திய அரசுதான், பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு சந்ததியே கெட்டுப் போச்சு!

இன்பதுரை, அ.தி.மு.க., எம்.பி.,

கடந்த ஐந்து ஆண்டுகளில், நெஞ்சை கிழிக்கும் கோர நிகழ்வுகளால், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு உச்சகட்டத்தில் இருந்தது. ஆளும்கட்சியினராலும், செல்வாக்கு படைத்தவர்களாலும், போலீசாரின் கைகள் கட்டப்பட்டதால், எதுவுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மரக்காணம், மதுராந்தகத்தில், 2022ம்ஆண்டு கள்ளச்சாராயம் இறப்பு நிகழ்ந்தது. 2023ம் ஆண்டு கள்ளக்குறிச்சியில், அதேபோன்ற கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்தது. அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், முக்கியப்புள்ளிக்கு தொடர்பு இருந்தது மக்களுக்கு தெரிந்தது. ஆனால், அந்த ‘சார்’ யார் என்பதை, இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

கடந்த 20 நாட்களுக்கு முன்புகூட, கிருஷ்ணகிரியில் இரண்டு வயது குழந்தைக்கு, பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. போலீசாருக்கே பாதுகாப்பில்லை. போலீஸ் நிலையத்தில் புகுந்து தாக்கும் காட்சிகளைக் கூட, நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது தி.மு.க., அரசு.

தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில், நான் கேள்விப்பட்ட போதை வஸ்துக்கள், தமிழகத்தில் தாராள புழக்கத்திற்கு வந்தன. அதை விற்றவர்கள், ஆளும் கட்சியினருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகின.

பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில், அவற்றின் விற்பனை தாராளமாக நடந்தது. இதனால், ஒரு சந்ததியே கெட்டுப்போகும் நிலையை, தி.மு.க., அரசு உருவாக்கி உள்ளது. ஒரு கட்டத்தில் இந்த சீரழிவு மக்களுக்குப் பழகியே போய்விட்டது.

Source link