நியூயார்க்: போரில் நேரடியாகப் பங்கேற்காத அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் நிறுத்தி கொள்ள வேண்டும் என ஐநா வலியுறுத்தி உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்., 28ம் தேதி தாக்குதலை துவக்கின. இது உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. போரை நிறுத்துவதற்கு வாய்ப்பாக, 5 நாட்கள் தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இருப்பினும், இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வர, ஒரு மாத போர் நிறுத்தம் உள்ளிட்ட 15 அம்சம் கொண்ட அமைதி திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்நிலையில் அண்டை நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஈரானுக்கு ஐநா வலியுறுத்தி உள்ளது. இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் எல்லை மீறிச் சென்றுவிட்டது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நான் விடுக்கும் செய்தி என்னவென்றால், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே சரியான தருணம். ஈரானுக்கு நான் சொல்வது என்னவென்றால், இந்த மோதலில் நேரடியாகப் பங்கேற்காத அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
