– நமது சிறப்பு நிருபர் –
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சு நடப்பதாக கூறப்படும் செய்திகளை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இது குறித்து ஐ.நா.,வுக்கான இஸ்ரேலிய துாதர் டானி டானோன் கூறியுள்ளதாவது: அமெரிக்கா முன்னெடுப்பதாக கூறப்படும் எந்தவொரு அமைதி பேச்சிலும் இஸ்ரேல் பங்கேற்கவில்லை. அத்தகைய பேச்சு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. பேச்சு நடந்து வருவதாக இருந்தாலும், ஈரானின் ராணுவ நிலைகள் மீதான இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல்கள் தொடரும். ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திறன்களை முழுமையாக அழிக்கும் வரை இந்த நடவடிக்கைகள் ஓயாது.இவ்வாறு அவர் கூறினார்.
ஈரானுடன் பேச்சு நடந்து வருவதாகவும், விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலிய துாதரின் கருத்து முரண்பாடாக அமைந்துள்ளது.
ஈரானின் நிபந்தனைகள்!
ஈரான் தரப்பில் இருந்து இதுவரை அமைதி பேச்சுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும், அமெரிக்காவின் 15 அம்ச அமைதி திட்டத்திற்கு பதிலாக ஈரான் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் விபரம்:
* மேற்காசிய நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும் அகற்றப்பட வேண்டும். இதுவே, பிராந்தியத்தில நிரந்தர அமைதியை ஏற்படுத்தும்
* ஈரானின் உட்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்துக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் நிதி இழப்பீடு வழங்க வேண்டும்
* ஈரானின் பொருளாதாரத்துக்கு பலம் சேர்க்க, உலக எண்ணெய் வினியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை தாண்டி செல்லும் கப்பல்களுக்கு, எகிப்து சூயஸ் கால்வாயில் சுங்கவரி வசூலிப்பதை போன்று, சுங்கவரி வசூலிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்
* லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பு மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்
* அணுசக்தி திட்டம் குறித்து ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும். ஆனாலும், ஏவுகணை திட்டங்களை கட்டுப்படுத்த அமெரிக்கா விதிக்கும் எந்தவித நிபந்தனைகளையும் ஏற்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போரில் ஏற்பட்டுள்ள பின்னடைவை மறைக்க அமைதி ஒப்பந்தம் முயற்சியை அமெரிக்கா கையிலெடுத்துள்ளதாக, ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி., எனும் இஸ்லாமிய புரட்சிகர போலீஸ் படையின் கதம் அல் – அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: ஈரானுடனான போரில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை மறைக்க, அமைதி ஒப்பந்தத்தை அந்நாடு கையில் எடுத்துள்ளது. இதை ராஜதந்திர வெற்றியாக சித்தரிக்க அமெரிக்கா முயன்று வருகிறது. உங்கள் தோல்வியை ஒப்பந்தம் என்ற பெயரில் அழைக்காதீர்கள். அமெரிக்கா இனி இந்த பிராந்தியத்தில் தன் பொருளாதார நிலையை மீட்டெடுக்க முடியாது. இப்பிராந்தியத்தில் அமெரிக்க முதலீடுகளின் அடையாளமே இருக்காது. முந்தைய எரிசக்தி மற்றும் எண்ணெய் விலைகளை மீண்டும் அமெரிக்கா காணாது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். ஆகையால், இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளித்து, உங்களை கால்நடைகள் போல் நடத்தும் அமெரிக்காவை உங்களின் பாதுகாப்புக்கான, நம்பகமான நட்பு நாடாக கருதுகிறீர்களா? அப்படி ஒரு அரசு எங்களுக்கு தேவையில்லை. யோசித்து பாருங்கள்; உங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்கர்கள் என்றாவது ஒரு தோட்டாவையாவது சுடுவார்கள் என நம்புகிறீர்களா? இவ்வாறு அவர் கூறினார்.
