இந்தியாவின் தொழில்துறை எதிர்காலத்தை மாற்றக்கூடிய முக்கியமான முயற்சியை மத்திய அரசு கையிலெடுத்துள்ளது.

இந்தியாவின் தொழில்துறை எதிர்காலத்தை மாற்றக்கூடிய முக்கியமான முயற்சியை மத்திய அரசு கையிலெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு, மார்ச் 20 அன்று மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் திறனில் சின்டர்ட் நியோடியமியம்- இரும்பு -போரான் (என்.டி.எப்.இ.பி.,) நிரந்தர காந்தங்கள் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களை தேர்வு செய்யும் டெண்டர் அது.

மின்சார வாகனங்கள் முதல் பாதுகாப்பு துறையின் ஏவுகணைகள் வரை பல துறைகளுக்கு அத்தியாவசியமான இந்த காந்த உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். இந்த திட்டத்திற்கு மொத்தம் 7,280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகளவில் சுமார் 94 சதவீத நிரந்தர காந்த உற்பத்தியை சீனா கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ள நிலையில், இந்த முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் அரிய காந்தங்களில் 84 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

இந்த திட்டம் 7 ஆண்டுகாலத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இதில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன. 750 கோடி ரூபாய் முதலீட்டு மானியம், 6,450 கோடி ரூபாய் விற்பனை சார்ந்த ஊக்கத்தொகை ஆகியவை அவை.

இந்த ஊக்கத்தொகை முறை, நிறுவனங்கள் உண்மையில் உற்பத்தி செய்து விற்பனை செய்த பின்னரே பெரும்பாலான நிதி வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக செயல்படாத திட்டங்கள் உருவாவதை தடுக்க அரசு முயற்சிக்கிறது.

மொத்தம் ஐந்து நிறுவனங்கள் வரை உலகளாவிய போட்டி முறையில் தேர்வு செய்யப்படவுள்ளன. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஆண்டுக்கு 600 முதல் 1,200 மெட்ரிக் டன் வரை உற்பத்தி திறன் ஒதுக்கப்படும். மே 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

முக்கியமாக, அணு ஆற்றல் துறையின் கீழ் செயல்படும் ஐ.ஆர்.இ.எல்.,(இந்தியா) நிறுவனம், என்.டி.பி.ஆர்., ஆக்சைடு மூலப்பொருளை குறைந்த விலையில் வழங்க உறுதி அளித்துள்ளது. இது தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

சீனாவின் ஆதிக்க

ம் சீனா கடந்த சில ஆண்டுகளாக அரிய மண் தாதுக்கள் மீது கட்டுப்பாட்டை வலுப்படுத்தி வருகிறது. 2023 முதல் துவங்கிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள், உலகளாவிய உற்பத்தி தொடரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் போர்டு நிறுவனம் தனது உற்பத்தி வரிசையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் மாற்று ஆதாரங்களை தேடி அலைந்தனர்.

2025 ஏப்ரலில், சீனா ஏழு முக்கிய, அரிய கனிமங்கள் மற்றும் அவற்றை கொண்ட காந்தங்களின் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவாக, உலகளவில் காந்த ஏற்றுமதி 75 சதவீதம் வரை குறைந்தது.

இந்தியாவிலும் இதன் தாக்கம் தெளிவானது. மாருதி சுசூகி நிறுவனம், தனது இ-விடாரா மின்சார எஸ்.யு.வி., தயாரிப்பை மூன்றில் ஒரு பங்காக குறைத்தது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்தது.

இந்தியாவின் வளம்

இந்தியாவில் உலகின் மூன்றாவது பெரிய அரிய தாதுக்கள் இருப்பு உள்ளது. சுமார் 6.90 மில்லியன் டன் வளம் இருந்தாலும், உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. 2024ம் ஆண்டில் இந்தியா வெறும் 2,900 டன் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது.

கேரளா, தமிழகம், ஆந்திரா, ஒடி ஷ ா மாநிலங்களின் கடற்கரை மணலில் உள்ள மோனசைட் தாதுக்கள் முக்கிய ஆதாரமாக உள்ளன. ஆனால், இதில் தோரியம் இருப்பதால், அதை பயன்படுத்துவதற்கு அணு ஆற்றல் சட்டங்களின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இதுவே உற்பத்தி வளர்ச்சியை தாமதப்படுத்தியுள்ளது.

உலகளாவிய போட்டி

இந்தியாவுடன் சேர்த்து அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அரிய கனிமங்கள் துறையில் முதலீடுகளை அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் எம்.பி., மெட்டீரியல்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 7,000 டன் காந்த உற்பத்தி செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜப்பான் கடலடி தாதுக்கள் ஆய்வை துவங்கியுள்ளது.

இந்தியாவும் தேசிய முக்கிய கனிம திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக, சுரங்கம் முதல் காந்த உற்பத்தி வரை முழுமையான தொடரை உருவாக்க முயற்சித்து வருகிறது.

சவால்கள், எதிர்பார்ப்புகள்

என்.டி.எப்.இ.பி., காந்த உற்பத்தி தொழில்நுட்பம் மிக சிக்கலானது. 13 கட்டங்களை கொண்ட இந்த செயல்முறை உயர் துல்லியத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும்.

மேலும், உற்பத்தி செலவுகள் சீனாவை விட நம் நாட்டில் அதிகமாக உள்ளன. சுற்றுச்சூழல் சவால்களும் முக்கியமானவை. அரிய தாதுக்கள் செயலாக்கத்தில் அதிகளவு நச்சுக்கழிவுகள் உருவாகின்றன. இதை பாதுகாப்பாக நிர்வகிப்பது அவசியம்.

முன்னேற்றத்தின் தேவை

இந்தியாவின் மின்சார வாகன இலக்குகள், பாதுகாப்பு துறை தேவைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் அனைத்தும் இந்த காந்தங்களை சார்ந்துள்ளன. 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஆண்டுக்கு 7,000 டன் காந்த தேவை உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த திட்டம் வெறும் தொழில்துறை முயற்சி மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார தற்சார்புக்கும் முக்கியமான தேவையாக பார்க்கப்படுகிறது.

சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க மத்திய அரசு எடுத்துள்ள இந்த முயற்சி, வெற்றிகரமாக செயல்பட்டால், உலகளாவிய வினியோக தொடரில் நம் நாட்டுக்கு முக்கிய இடத்தை பெற்றுத்தரும் என்பது நிபுணர்களின் கருத்து.

அது நடந்தால், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை விரைவுபடுத்தும் தொழில் வளர்ச்சி உறுதியாகும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Source link