நமது நிருபர்புதுச்சேரியில் 3 தொகுதிகள் விடுதலை சிறுத்தைக்கட்சி போட்டியிடுவது உறுதியானது. காங்கிரஸ் மீது

நமது நிருபர்

புதுச்சேரியில் 3 தொகுதிகள் விடுதலை சிறுத்தைக்கட்சி போட்டியிடுவது உறுதியானது. காங்கிரஸ் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இண்டி கூட்டணியில் புதுச்சேரியில் காங்., – 16, தி.மு.க.,-13; வி.சி.,-1 என்று தி.மு.க., தலைமை கூட்டணி உடன்பாட்டை அறிவித்தது. தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதே தொகுதிக்கு காங்., தலைவர் வைத்திலிங்கம் மனு தாக்கல் செய்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளனும் 3 தொகுதிகளில் தனித்து களம் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியல்:

ஊசுடு- அரிமாத்தமிழன்

நெட்டப்பாக்கம்- அமுதவன்

உழவர்கரை- செல்வ.புஷ்பலதா

புதுச்சேரி காங்கிரஸ் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கென ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளிலிருந்து ‘உழவர்கரை தொகுதியை’ திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவைச் சார்ந்தவரும், பாஜகவிலிருந்து விலகி ஓரிரு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவருமான ஒருவரைத் தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

அந்தத் தொகுதி விசிகவுக்கென ஒதுக்கப்பட்ட பிறகும்கூட அவரை வாபஸ் பெற வைக்காமல் புதுவை காங்கிரஸ் மறுக்கிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உண்டா இல்லையா என்பது தெளிவாகாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப்பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3.00மணியோடு முடிவடைய உள்ளது. காங்கிரஸின் அணுகுமுறை விசிகவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது.

எனவே, வேறு வழியின்றி விசிக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள மூன்று தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியை சீரழித்து வரும் பாஜ கூட்டணியை வீழ்த்தி மீண்டும் சமூக நல்லிணக்கமும், வளர்ச்சியில் அக்கறையும் கொண்ட ஆட்சியைப் புதுச்சேரியில் அமைத்திட மதச்சார்பற்ற உணர்வுகொண்ட புதுச்சேரி மக்கள் விசிக வேட்பாளர்களுக்குப் பேராதரவு அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

புதுச்சேரி கள நிலவரம்!

என்ஆர்காங் vs காங்

லாஸ்பேட்டை, முத்தியால் பேட்டை, இந்திரா நகர், அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், நெடுங்காடு, காரைக்கால் ஆகிய 8 தொகுதிகளில் என்ஆர்காங்கிரஸ் – காங்கிரஸ் நேரடியாக போட்டியிடுகின்றன.

பாஜ vs காங்கிரஸ்

மண்ணாடிப்பட்டு, மணவெளி, திருநள்ளாறு, மாகே ஆகிய 4 தொகுதிகளில் பாஜ-காங்கிரஸ் நேரடியாக போட்டியிடுகின்றன.

அதிமுக vs திமுக

உப்பளம், உருளையன் பேட்டை

ஆகிய 2 தொகுதிகளில் அதிமுக- திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தொகுதிகள் விபரம்!

தேஜ கூட்டணியில் என்ஆர்காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக மற்றும் லஜக தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இண்டி கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக கூட்டணி 14 தொகுதியிலும் போட்டியிடுகிறது.

விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 28 தொகுதிகள், இந்த கூட்டணியில் உள்ள நேயம் மக்கள் கழகம் 2 தொகுதியிலும் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி 28 தொகுதியிலும் போட்டியிடுகிறது.

Source link