சேலம்: ‘‘நாங்கள் ஆயிரம், இரண்டாயிரம், பிரிட்ஜ் (Fridge), வாஷிங் மெஷின் (Washing Machine) என எதையும் இலவசமாகத் தர மாட்டோம். அவையெல்லாவற்றையும் நீங்களே வாங்கிக்கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோம்” என தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அவர் பிரசாரத்தில் பேசியதாவது: ஒரு சொட்டு தண்ணீரையும் தமிழர்களுக்கு தர முடியாது என்று சொல்லும் கர்நாடக காங்கிரஸ் கட்சி. அப்படி என்றால், ஒரு ஓட்டும் காங்கிரஸ் கட்சிக்கு போடமாட்டோம் என்று தமிழர்கள் ஏன் சொல்லுவதில்லை?
தமிழகத்தில் பெய்யும் மழையை கடலில் கலக்க விடாமல், ஏரி, குளம், குட்டைகளில் சேமித்தாலே நாம் அடுத்தவர்களிடம் தண்ணீருக்காகக் கையேந்தத் தேவை இல்லை. நாங்கள் ஆயிரம், இரண்டாயிரம், பிரிட்ஜ் (Fridge), வாஷிங் மெஷின் (Washing Machine) என எதையும் இலவசமாகத் தர மாட்டோம்.
அநீதிக்கு…
அவையெல்லாவற்றையும் நீங்களே வாங்கிக்கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோம். கல்வி, மருத்துவம், தூய குடிநீர் ஆகியவற்றைத் தரமாகவும், சரியாகவும், சமமாகவும் அனைவருக்கும் இலவசமாக வழங்குவோம். ஒரு வண்டி நிறையக் குப்பையைக் கொளுத்த, ஒரு வண்டி நிறைய நெருப்பைக் கொண்டு செல்ல வேண்டியதில்லை. ஒரு தீக்குச்சி போதும். அதுபோல, அநீதிக்கு எதிராக உங்கள் பிள்ளைகள் நாங்கள் தீக்குச்சியாக இருக்கிறோம். எங்கள் நோக்கம், படித்தவரும், படிக்காதவரும் என வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது.
மனிதநேயம்
ஒரே அமைப்பில் உழைப்பவருக்கு வேலை, படித்தவருக்கு கணக்குப் பொறுப்பு. அனைவருக்கும் இடமுள்ள ஒருங்கிணைந்த பொருளாதாரம். இறுதியில், “படிக்காதவர்” என்ற நிலையே இல்லாத சமூகத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. ஜாதி அரசியலானால், அங்குச் சமத்துவமும் சகோதரத்துவமும் செத்துப்போகும்; மதம் அரசியலானால், அங்கு மனிதநேயம் செத்துப்போகும். பணம் அரசியலானால், அங்குப் பண்பாட்டு ஒழுக்கம் செத்துப்போகும்; மொழி மற்றும் இனமே அரசியலாக வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.
