ஆந்திரா மாநிலம் மார்க்காபுரம் மாவட்டத்தில் உள்ள ராயவரம் பகுதியில் இன்று (26.03.2026) டிப்பர் லாரியும், தனியார் சொகுசு பேருந்தும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீ பற்றியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிருடன் தீயில் கருகி உயிரிழந்தனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அதோடு பேருந்தும், டிப்பர் லாரியும் தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது பேருந்து மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இவ்வாறு மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், உள்ளே இருந்த பயணிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர் எனக் கூறப்படுகிறது. பேருந்து விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
