திருவனந்தபுரம்: பிரதமர் மோடி மற்றும் தேர்தல் கமிஷன் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிடப்பட்ட விவகாரத்தில் எக்ஸ் சமூக வலைதளம் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக கேரள சைபர்விங் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அவதூறு கருத்துக்களுடன் கூடிய வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக தேர்தல் கமிஷன் எங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தது. அதனை விசாரித்ததில், அந்த பதிவு மக்களை தவறான வகையில் வழிநடத்துவதுடன், அரசியலமைப்பின் செயல்படும் அமைப்புகளை குறைத்து மதிப்பீடு செய்கிறது. சுதந்திரம் மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை பாதிக்கும் வகையில் அந்த வீடியோ இருப்பதும் உறுதியானது.
இதனையடுத்து அந்த பதிவை வெளியிட்ட லக்ஷிமி என் ராஜூ என்ற நெட்டிசன் உள்ளிட்டவர்கள் மற்றும் எக்ஸ் சமூகவலைதளம் மீது திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
