ஜெனிவாவில் நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி அயத்துல்லா காமெனி கொல்லப்பட்டார். அவருடன் மனைவி, மகள், மருமகன் மற்றும் 40 க்கும் மேற்பட்ட ராணுவ உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும், அலி அயத்துல்லா காமெனியின் மகன் மொஜ்தபா காமெனியும் படுகாயமடைந்தார்.
அலி அயத்துல்லா காமெனியின் இறப்பிற்குப் பிறகு மொஜ்தபா காமெனி ஈரானின் உச்ச தலைவராகப் பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவம், தங்கள் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. தங்கள் நாட்டின் உச்சத்தலைவர் கொல்லப்பட்டதற்கும், தங்கள் நாட்டின் மாணவர்கள் உட்பட ஏராளமான குடிமக்கள் கொல்லப்பட்டதற்கும் எதிரிகளை பழி தீர்ப்போம் என ஈரான் தரப்பில் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த இரு தரப்புக்கு இடையில் நடைபெற்று வரும், இந்த போர் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த போரினால் பல்வேறு நாடுகள் நெருக்கடி நிலையைச் சந்தித்து வருகின்றன. அதனால், உலக நாடுகள் அனைத்தும் இந்த போர் முடிவிற்கு வர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ள கருத்து உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்னில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ட்ரம்ப், ” இஸ்லாமியக் குடியரசான ஈரானின் அடுத்த உச்ச தலைவராகத் தான் வரவேண்டும் என்ற யோசனையை ஈரான் தலைமை என்னிடம் முன் வைத்தது. ஆனால், நான் அதை மறுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார். இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைகளுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாவதாகக் கூறப்படும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது.
