காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியாகாந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். முன்னதாக, பருவநிலை மாற்றம் காரணமாக அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
கடந்த மார்ச் 24 அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்காரணமாக, நேற்று (25-03-26) கேரளத்தில் நடைபெற இருந்த பிரச்சார கூட்டத்திற்கான பயணத் திட்டத்தை ராகுல் காந்தி ரத்து செய்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாருடன் மருத்துவமனையில் இருந்து வரும் ராகுல்காந்தி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மருத்துவமனையில் என் தாய் சிகிச்சை பெற்றுவரும் அறையில் நான் உறங்கிக்கொண்டிருந்தேன். எந்த ஒரு மகனைப் போலவும், எனக்கும் எனது தாயாரின் உடல்நிலை குறித்த கவலை இருந்தது. அந்த சமயத்தில், எனக்கு ஒரே ஒரு ஆறுதல் இருந்தது. ஒவ்வொரு மணி நேரமும் என் தாயாரைப் பரிசோதித்த கேரள செவிலியர் தான், எங்களுக்கு ஆறுதலாக இருந்தார்.
அவர் ஒவ்வொரு மணி நேரமும் என் தாயைப் பற்றி விசாரிப்பார். புன்னகையுடன் கைகளைப் பற்றிக்கொள்வார். இதுபோல நாடுமுழுவதும் எத்தனை மகன்கள், மகள்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் தங்களின் கடினமான சூழலில் கேரளத்துச் செவிலியர்களால் ஆறுதல்பட்டிருப்பார்கள் என்று சிந்தித்தேன். அவர் இரவு முழுவதும் தூங்காமல் வேலை செய்வதாகக் கூறினார்.
இதுபோல, உலகம் முழுவதும் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில், கேரளத்தைச் சேர்ந்த செவிலியர்கள் இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களின் கைகளைப் பற்றி, அவர்களை இயல்பாக உணர வைக்கின்றனர். இது தான் கேரள மாநிலத்தின் ஆன்மா” என்று தெரிவித்துள்ளார்.
