சீன தூதரகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபர்; ஜப்பானில் அதிர்ச்சி

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் அமைத்துள்ள சீன தூதரகத்திற்குள் ஒருவர் கத்தியுடன் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  தூதரக ஊழியர்கள் அத்துமீறி நுழைந்த நபரைப் பிடித்து ஜப்பான் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடமிருந்த கத்தியைப் பறிமுதல் செய்த நிலையில், அவர் தூதரக ஊழியர்களைக் கொலை செய்யப் போவதாக மிரட்டியதாகவும் சீன தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.  

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் ஜப்பான் ராணுவ பாதுகாப்பது படையின் இரண்டாம் நிலை லெப்டினினட், கோடாய் முரடா (23) என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தான் தூதரக அதிகாரிகளிடம் சில கருத்துக்களைத் தெரிவிக்க வந்ததாகவும், அது நிராகரிக்கப்பட்டால் தான் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் கோடாய் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனிடையே, இந்த சம்பவத்தைக் கண்டித்த சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம், ” வியன்னா உடன்படிக்கையின் கீழ் தூதரகங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் ஜப்பான் கடமை தவறிவிட்டது” எனக் குற்றம் சாட்டியுள்ளது. 

இதற்கு, ஜப்பான் அரசு வருத்தம் தெரிவித்ததோடு, இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு உரியத் தண்டனை பெற்றுத் தருவதாகவும், வருங்காலங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.  

Source link