சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். பாத்வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் ரவி இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது.
இதில் சமுத்திரக்கனி கலந்து கொண்டு பேசுகையில், “2003 காலகட்டத்தில் கே.பி. சாருடைய பட்டரையில் செந்தமிழன் எழுத்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் இருப்பார்கள். அவருக்கு மட்டும் மற்றவர்களை விட சம்பளம் அதிகமாக இருக்கும். அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர், ஒரு நாள் என்னிடம் வந்து இந்த இடத்தை விட்டு கிளம்புவதாக சொன்னார். ஏன் என கேட்ட போது, படுத்தால் தூங்கம் வரவில்லை, நெஞ்சை அடைக்குது என சில காரணங்கள் சொன்னார். டாக்டரிடம் போனால் அவருக்கு எதுவுமில்லை என சொன்னார். பின்பு இந்த இடம் எனக்கு பொருந்தவில்லை என அவர் கிளம்பி போய்விட்டார். கிட்டத்தட்ட 18ஆண்டுகள் கழித்து கோவிட் முடிந்த சமயத்தில் இந்த பட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு நண்பர் கொரோனா ஊசி போட்ட பிறகு உடம்பில் எதுவுமே வேலை செய்யவில்லை என சொன்னார்.
பின்பு ஒரு ஆசானை சந்தித்ததாக சொல்லி அவருடன் ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக பகிர்ந்தார். அதாவது பிரபஞ்சத்துடன் தொடர்பில் இரு, அது உன்னை காக்கும் என அந்த ஆசான் சொன்னதாக சொனார். ஆறு மாதம் கழித்து என் நண்பருக்கு எல்லாமே சரியாகிவிட்டது. அதனால் அந்த ஆசானை அடிக்கடி சந்தித்து வந்தார். எனக்கு அந்த ஆசானை சந்திக்க வேண்டும் என சொன்னேன். அவர் ஆசானுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல என் நண்பன் என அந்த ஆசான் சொல்லியிருக்கார். என் நண்பனா… யார் அது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்புறம் கிளம்பி போய் பார்த்தால் என்னுடைய நண்பன் செந்தமிழன். போய் பார்த்தவுடனே அவர் சொன்ன முதல் வார்த்தை, ‘என்னை பார்க்க வர்றதுக்கு இவ்வளவு நாளாச்சா உனக்கு’.
அவரை பார்க்க போகும் போது செல்லும் வழியெல்லாம் பொட்டல்காடாக இருந்தது. ஆனால் அதில் ஏழு ஏக்கர் மட்டும் ஒரு வனமாக இருந்தது. அதில் பறவை, ஆடு, மாடு என எல்லாமே இருந்தது. அற்புதமான மனிதர்கள் இருந்தார்கள். நண்பனை கட்டித்தழுவி இங்க என்ன செய்கிறாய் என கேட்ட போது, நிறைய விஷயங்கள் தெரிய வந்தது. கிட்டத்தட்ட 65 புத்தகங்கள் எழுதியிருக்கார். அவரை விட்டு திரும்பும் போது, நமக்கு பொருந்தாத இடத்தில் இருப்பதை விட பிடித்த இடத்தில் இருந்தால் எதுவும் நமக்கு வராது என உணர்ந்தேன். அவர் மிகப்பெரிய செல்வந்தர். அவரை போல் பொருந்தாத இடத்தில் இருக்கும் நிறைய பேர் பிடித்த இடத்திற்கு சென்று செல்வந்தர்களாக இருப்பவர் நிறைய பேர். காலையில் ஜிம்மிற்கு சென்ற போது, சார் நம்ம பிரதமர் அடுத்த லாக்டவுனுக்கு தயாராவதாக சொன்னாரே அதை கவனீசீங்களா என ஒருவர் சொன்னார். ஆமா சார் தயாராவோம் என சொன்னேன். ஆனால் எனக்கு ஒரு சந்தோஷம். ஏன்னா, எங்ககிட்ட நல்ல குடிநீர் இருக்கு, காற்று இருக்கு, நல்ல உணவு இருக்கு. நாங்களெல்லாம் தற்சார்பு வாழ்க்கைக்கு வந்தவர்கள். யாரையும் எதிர்பார்க்காமல் அப்படி இருப்பவர்கள் தான் ஆகச்சிறந்த செல்வந்தர்கள். மிகப்பெரிய சந்தோஷமானவர்கள். அதனை சொல்ல வந்ததுதான் இந்த படம்” என்றார்.
