திமுக-காங்கிரஸ் 6 தொகுதிகளில் நேரடி போட்டி; புதுவை அரசியலில் பரபரப்பு

புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 9 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே, மார்ச் 16 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த மார்ச் 23 அன்று நிறைவு பெற்றது. நாளை (26-03-26) வேட்புமனு திரும்பப் பெறக் கடைசி நாளாகும். இந்த தேர்தல் தேதி அறிவிப்பு, கடந்த மார்ச் 15 அன்று வெளியானது. தேர்தல் தேதி குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 

இதனால், கட்சிகளுக்குக் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த போதிய காலம் கிடைக்காமல் போனது. இதனால், கூட்டணிக் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இருகட்சிகளும் மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்தன. பின்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், கூட்டணியில் இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டியது. 

அதன்படி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் மற்றும் விசிக ஒரு இடத்திலும் போட்டியிடக் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. கூட்டணி சார்பாக உழவர்கரை தொகுதியில் விசிக போட்டியிட உள்ளது. இருப்பினும், ஊசுடு மற்றும் நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் தனித்துப் போட்டியிட இருப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

இது ஒருபுறம் இருக்க, திமுகவும் காங்கிரஸ் கட்சியும் 6 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட இருப்பதால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்கள், தங்களது வேட்புமனுவைத் திரும்பப் பெற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.  

இது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை, அவர்கள் வேட்புமனுவினை திரும்பப் பெற மறுத்துவிட்டால் இந்த தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் நாளை திரும்பப் பெறவில்லை என்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தலைமை  எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.   

Source link