திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் பாஜக போட்டியிடும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ஏற்கெனவே, அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை மாநிலங்களவை உறுப்பினர் ஆகிவிட்டதால் தொகுதியை பாஜகவுக்கு விட்டுத்தருவதில் அதிமுக தலைமைக்கு தலைவலி இருக்கவில்லை.
மேலும், இத் தொகுதியில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதால் பாஜக வற்புறுத்தி தொகுதியை கேட்டுப்பெற்றுள்ளதாக தெரிகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடலோர கிராமங்கள் அமைந்துள்ள இத்தொகுதியில் வள்ளியூர், திசையன்விளை, கூடங்குளம், பணகுடி, ராதாபுரம், காவல்கிணறு போன்ற முக்கிய இடங்களை உள்ளடக்கி இத்தொகுதி அமைந்துள்ளது.
சிறுபான்மையினர் அதிகமுள்ள இத்தொகுதியை பாஜக கேட்டுப் பெறுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கடந்த 2006 தேர்தலில் இத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவு கேட்டு அத்வானி பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.
