ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆளும் திமுக பரபரப்பாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதன் கூட்டணிக் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு, நிர்வாகிகள் கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சார பணிகள் என மும்மரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, கூட்டணி தொகுதி பங்கீட்டைப் பொறுத்த வரையில், இழுபறி நிலைகளைக் கடந்து திமுக சிறப்பாக நடத்தி முடித்துள்ளது .
இதில், திமுக 175 இடங்களில் போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4 இடங்கள் எனக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொகுதி நிலவரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதிமுக விற்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு இடங்களுக்கான தொகுதிகளை இறுதி செய்யும் பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற உள்ளது.
இதில் 3 தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது. கடந்த தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் மதிமுக போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் இரண்டு தொகுதிகள் குறைவாகப் போட்டியிடுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவினர், தங்களுக்கு இடங்கள் குறைவாக வழங்கி இருப்பது மற்றும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இருந்த போதிலும் இந்த அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த 4 இடங்களை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், தொகுதி ஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. காரணம், நாங்கள் விரும்பி கேட்டிருந்த தொகுதிகளையே திமுக எங்களுக்கு ஒதுக்கியுள்ளது. அந்த வகையில் எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே, தொகுதி ஒதுக்கீடு குறித்த ஒப்பந்தத்தில் இன்று மாலை மதிமுக கையெழுத்திட இருப்பது குறிப்பிடத்தக்கது.
