கடைசி விவசாயி மணிகண்டன் உருவாக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள வெப் சீரிஸ் ‘காட்டான்’. இத்தொடரை மணிகண்டன் மற்றும் அஜித்குமார் என இரண்டு பேர் இயக்கியுள்ளனர். இத்தொடரை தயாரிப்பாளர்களில் ஒருவராக விஜய் சேதுபதி தயாரித்தும் உள்ளார். இதில் நாயகியாக ரிஷா என்பவர் நடித்துள்ளார். இத்தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் நாளை முதல் வெளியாகிறது.
இந்த நிலையில் இத்தொடரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசுகையில், “இந்த வெப் சீரிஸை போல, இது ஆரம்பித்ததில் இருந்து இந்த ஸ்டேஜ் வருகிற வரைக்கும் பின்னாள் நடந்ததை சினிமாவாக எடுத்தாலே மூன்று பார்ட் எடுக்கலாம். அந்தளவு ஏகப்பட்ட எபிசோடுகள் சீசன்கள் இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. நாங்கள் அவர்களை சர்ப்போர்ட் பண்ணுவதாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் எங்களை நம்பியது, உள்ளே வந்தது நல்ல விஷயம்.
ஹாட்ஸ்டாரில் இருக்கும் பிரதீப்புக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது. பெரிதாக பேசியது இல்லை, நிறைய பார்ட்டிகளில் மீட் பண்ணியிருக்கோம். ஆனால் அவரிடம் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அவர்தான் என்னை பிக் பாஸுக்குள் அழைத்துவந்தவர். எனக்கு இது போல் சிலரிடம் தானாகவே அது உருவாகவிடும். இன்றைக்கு நான் இந்த இடத்தில் இருப்பதற்கு அவர் போல பெரிதாக அறிமுகமில்லாத நபர்கள் என் மேல் வைத்த நம்பிக்கையில் தான். எனக்கு என் மேல் பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பாராட்டிய பிறகு தான் தெரியும், அந்த வேலையை நம்மால் செய்ய முடியும் என்று. அதற்கு முன்பாகவே நம் மேல் நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் மிகப்பெரிய ஆச்சரியம். அப்படித்தான் மணிகண்டன், சீனு ராமசாமி, சிஜே பாஸ்கர் என நிறைய பேர் எனக்கு இருந்தார்கள். இது போல் நிறைய பேர் என்னை நம்பியதால் தான் நான் என்னை நம்ப ஆரம்பித்தேன்” என்றார்.
