‘அங்கீகாரம் இல்லாத பாமக உரிமை கோர முடியாது’-தேர்தல் ஆணையம் வாதம்

பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்கும் வரை கட்சியின் சின்னமான மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்து இருந்தார். இன்று (26/03/2026) காலை முதல் இந்த வழக்கானது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தேர்தல் ஆணையம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி என மூன்று தரப்பு வாதங்கள் மொத்தமாக வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை, ‘தேர்தல் நடைமுறை தொடங்கிய அமலில் உள்ளதால் பாமகவின் மாம்பழம் சின்னத்தையும் முடக்குவது தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் அளிக்க அதிகாரம் இல்லை. சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என்ற ராமதாஸின் கோரிக்கை என்பது முற்றிலும் தவறானது. காரணம் முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்த பாமக தற்பொழுது அங்கீகாரம் இல்லாத கட்சியாக உள்ளது. எனவே பாமகவிற்கு பொதுசின்னம் ஒதுக்கீடு விதியின்படி மட்டுமே அன்புமணியின் தரப்பிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. எனவே அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருக்கும் பாமக மாம்பழம் சின்னத்திற்கு உரிமை கோர முடியாது. அதேபோல் அன்புமணி ராமதாஸ் என்ற தனி நபருக்காக மாம்பழம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருப்பதால் கட்சியின் மாம்பழம் சின்னம் பொதுசின்னமாக அறிவிக்கப்பட்டு முதலில் உரிமை கோரியவருக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்ற கருத்தை வைத்தது.

அதேபோல அன்புமணி தரப்பில் ‘பொதுக்குழு நடத்தாமலேயே ராமதாஸ் தன்னை தலைவர் என்று தேர்ந்தெடுத்தது செல்லாது. ராமதாஸை தவறாக வழிநடத்துகிறார்கள். இது தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பிரச்சனை. ஆனால் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள்’ என்ற வாதம் வைக்கப்பட்டது. அதேபோல ராமதாஸ் தரப்பில் ‘அன்புமணி கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். ஆனால் மீண்டும் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக ஆவணங்களை மோசடியாக தயாரித்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி இருக்கிறார்’ என வாதிடப்பட்டது.

மூன்று தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று மாலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Source link