தவெகவில் இணைந்த முக்கிய காங்கிரஸ் நிர்வாகி

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக த.வெ.க. சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதே சமயம் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் நேர்காணல் நடத்தியிருந்தார். விரைவில் அதிகாரப்பூர்வமான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனையொட்டி த.வெ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நாளை (27.03.2026) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Congress official joins Tvk Photograph: (tvk)

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே விஜய்யின் கட்சியில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் அக்கட்சியில் இணைந்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ள நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் காங்கிரஸரை சேர்ந்த டி.செல்வம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

முன்னதாக தவெக கட்சியில் அவர் தன்னை இணைத்துக் கொள்வது குறித்து அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக  செய்திகள் வெளியான நிலையில் அவர் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்று விஜய்யின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார் டி.செல்வம்.

Source link