விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள தொடர் ‘முத்து என்கிற காட்டான்’. இதில் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இத்தொடர் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது. ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.
இத்தொடரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜே பார்வதி பேசுகையில், “இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை. அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன்.
உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்” என்றார்.
