தர்மபுரி: ”பசி, பஞ்சம், ஊழல், ஜாதி பாகுபாடு இல்லாத நாட்டை உருவாக்க, ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்,” என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சீமான் பேசியதாவது:தமிழகத்தில் எல்லாருக்கும் தேவையான வேலைவாய்ப்பை உருவாக்குவோம். நிலமும் வளமும் சேர்ந்த தொழிற்சாலை உருவாக்கப்படும்.
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். படிக்காதவர்களே இல்லை என்பதை உருவாக்குவதே குறிக்கோள். வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்படும். நஞ்சு இல்லா உணவு உற்பத்தி செய்யப்படும். பாலில், 3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் உள்ளது.
பல கோடி பனை நடவு திட்டம், மக்கள் இயக்கமாக மாற்றப்படும். பசி, பஞ்சம், ஊழல், ஜாதி பாகுபாடு இல்லாத நாட்டை உருவாக்க, ஒரே ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். வேளாண் விளைபொருளின் விலையை விவசாயிகள் நிர்ணயம் செய்வார்கள். தமிழக அரசு முத்திரையுடன் அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படும். தமிழகம் தலைசிறந்த நாடாக உருவாக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
