சென்னை: பா.ம.க.,வின் ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பா.ம.க.,வில், நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடிக்கிறது. கட்சி, சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடைவிதிக்க கோரி ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மாம்பழம் சின்னத்தை அன்புமணிக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து, ராமதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாம்பழம் சின்னத்தை கேட்டு சிவில் நீதிமன்றத்தை உடனடியாக நாடுமாறு, ராமதாஸ் தரப்புக்கு அறிவுறுத்தியது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுவை மூன்று நாட்களில் விசாரித்து முடிவெடுக்க, சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மபிரபு முன், ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அன்புமணி தரப்பும் விளக்கம் அளித்தனர்.இந்த வழக்கில் இன்று தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாம்பழம் சின்னத்தை நீதிமன்றத்தால் முடக்க முடியாது என விளக்கம் அளித்து இருந்தது.
தொடர்ந்து, சென்னை உரிமையியல் நீதிமன்றம், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால் இதில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனை நாட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
