தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது தமாக. இந்நிலையில் அக்கட்சியின் இரண்டு மாவட்ட தலைவர்கள் ஒரே நேரத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமாகவின் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜு சாக்கோ மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ”நாங்கள் இரண்டு பேரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்கிறோம். 1993-லிருந்து காங்கிரஸ் கட்சியில் இருக்கிறோம். 1996 -ல் தமிழ் மாநில காங்கிரஸை மூப்பனார் தொடங்கினார். அவருடன் பயணித்து வந்தோம். திரும்பவும் கட்சியை காங்கிரஸில் இணைக்கும் பொழுது ஜி.கே.வாசனோடு காங்கிரஸில் இணைந்து பயணித்தோம்.
2014-ல் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக வட சென்னையில் போட்டியிட்டேன். தொடர்ந்து இருவருமே மாவட்ட தலைவராக தான் இருக்கிறோம். எங்களுடைய ஆதங்கம் என்னவென்றால் 2016-ல் ஜெயலலிதா 10 முதல் 11 சீட்டு கொடுக்கிறேன் என இரட்டை இலையில் நிற்கச் சொன்னார்கள். ஆனால் வேறு சின்னத்தில் நிற்க விருப்பம் இல்லை என்று மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து 29 சீட்டில் நின்றோம். அந்த தேர்தலிலும் ராயபுரம் தொகுதியில் வேட்பாளராக நின்றேன். ஆனால் நாங்கள் எல்லோருமே டெபாசிட் இழந்தோம்.
அன்றிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் எங்களுக்கு மிகப்பெரிய அடி. ஆனால் தொடர்ந்து ஜி.கே.வாசனின் முடிவுகள் தவறான முடிவுகளாக தான் இருக்கிறது. இருந்தாலும் அவருடன் தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி இருந்தும் கூட கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான இரட்டை இலை சின்னத்தை தவிர்த்துவிட்டு சுயலாபத்திற்காக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார் ஜி.கே.வாசன். அவருடன் சேர்ந்து நாங்களும் அழிய முடியாது என்பதால் கட்சியில் இருந்து விலகுகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரு தொகுதியைக் கூட ஜி.கே.வாசன் வாங்கவில்லை. தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகுகிறோம்” என்றனர்.
