தனது கட்சி பெண்களை பற்றி பொன்ராஜ் அவதூறாக இணையதளத்தில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் செங்கோட்டையனும் நேரடியாக சென்று மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ”கட்சியின் தலைவர் விஜய்யே நேரில் வந்து மனுவில் கையொப்பமிட்டு கொடுத்துள்ளார். குறிப்பாக தமிழகத்தினுடைய கலாச்சாரம், பண்பாடு, பெண்களை பேணிக்காப்பது, கலாச்சாரம் இப்படி இருக்கும் பொழுது நம்முடைய குடும்பத்திலும் சகோதரிகள், தாய்கள் இருக்கிறார்கள். இவ்வளவு கேவலமான வார்த்தைகளை அவர் பேசுவது கண்டிக்கத்தக்கது.
அவர் குறிப்பிட்டு இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்கது. உண்மையில் கண்டிக்கத்தக்கது. இவர் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வந்துள்ளோம். நம்முடைய தமிழ்நாட்டு பெண்கள் இனத்தையே ‘விலைமாதர்’ என்ற அர்த்தத்தில் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. உண்மையிலேயே இந்த நாட்டில் இருக்கக்கூடிய பெண்கள், இந்த நாட்டில் வாழ்கின்ற அத்தனை பேரையும் இழிவுபடுத்துகின்ற நிலையாக தான் பேச்சு இருந்திருக்கிறது. அவர் சொன்ன அவதூறு கருத்தில் உறுதியாக இருக்கின்ற காரணத்தினால் தான் அவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் கொடுத்துள்ளோம். இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கிறோம்” என்றார்.
