சென்னை: 'தமிழகம் முழுதும் படுகொலைகளை பெருக்கி விட்டு கூச்சமே இல்லாமல், 'வெல்வோம் ஒன்றாக' என, அறை கூவலிடும்

சென்னை: ‘தமிழகம் முழுதும் படுகொலைகளை பெருக்கி விட்டு கூச்சமே இல்லாமல், ‘வெல்வோம் ஒன்றாக’ என, அறை கூவலிடும் தி.மு.க., ஆட்சி, இனி என்றும் தேவையில்லை’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில், ஆத்துாரை சேர்ந்தவர் சந்திரன், 28; விவசாய கூலி தொழிலாளி. முன் விரோதம் காரணமாக அவரது நண்பர்கள் நான்கு பேர்,சந்திரனை இம்மாதம், 15ம் தேதி, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தனர்.

இது தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், துளிகூட பயமில்லாமல் கொலை நடந்துள்ளது. அதை, அருகில் இருப்போர் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும், தி.மு.க., ஆட்சியில் கொடூர குற்றங்கள் அன்றாடம் சம்பவமாகிவிட்டதையும், சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாக சிதைந்து உள்ளதையும் பட்டவர்த்தனமாக்குகிறது.

தமிழகம் முழுதும் இதுபோன்ற படுகொலைகளை பெருக்கிவிட்டு, கூச்சமே இல்லாமல், ‘வெல்வோம் ஒன்றாக’ என, அறை கூவலிடும் தி.மு.க., ஆட்சி இனி என்றும் தேவையில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தை வன்முறை கூடாரமாக மாற்றி, மக்களின் நிம்மதியையும், பாதுகாப்பையும் பறித்த தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link