எகிப்து கால்பந்து வீரர் விலகல்: லிவர்பூல் கிளப் அணியில் இருந்து

லிவர்பூல்: லிவர்பூல் கால்பந்து அணியில் இருந்து எகிப்தின் முகமது சலா விலக உள்ளார்.

எகிப்து கால்பந்து வீரர் முகமது சலா 33. முன்கள வீரரான இவர், 2017ல் இங்கிலாந்தின் லிவர்பூல் கிளப் அணியில் இணைந்தார். லிவர்பூல் அணிக்காக இதுவரை 435 போட்டியில் (255 கோல்) விளையாடி உள்ளார். கடந்த பிரிமியர் லீக் சீசனில் (2024-25) அதிகபட்சமாக 29 கோல் அடித்த முகமது சலா, லிவர்பூல் அணி கோப்பை வெல்ல முக்கிய பங்குவகித்தார். இவரது பங்களிப்பில் லிவர்பூல் அணி, ஒரு கிளப் உலக கோப்பை (2019), 2 சூப்பர் கோப்பை (2019), 2 பிரிமியர் லீக் (2019-20, 24-25), ஒரு எப்.ஏ. கோப்பை (2022), 2 லீக் கோப்பை (2022, 2024), வென்றது. தவிர இவர், பிரிமியர் லீக் வரலாற்றில் லிவர்பூல் அணி சார்பில் 4 முறை (2017-18, 18-19, 21-22, 24-25) ‘கோல்டன் பூட்’ விருது வென்றுள்ளார்.

இந்நிலையில், நடப்பு சீசனுடன் லிவர்பூல் அணியில் இருந்து விலகுவதாக முகமது சலா அறிவித்துள்ளார். இதன்மூலம் லிவர்பூல் அணியுடனான 9 ஆண்டு பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

முகமது சலா கூறுகையில், ”துரதிருஷ்டவசமாக அந்த நாள் வந்துவிட்டது. நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. லிவர்பூல் அணியை விட்டு விலகுவது எளிதானதல்ல. என் வாழ்வின் மிகச்சிறந்த காலத்தை இந்த அணி வழங்கியது. லிவர்பூல் அணியில் ஒருவனாக எப்போதும் இருப்பேன். எனது ரசிகர்களுக்கு என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை. போட்டியில் எனக்கு ஆதரவாக இருந்ததை ஒருநாளும் மறக்கமாட்டேன். அனைவருக்கும் நன்றி,” என்றார்.

Source link