– நமது நிருபர் –
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கட்சியினர் யாரிடமும் ஆலோசிக்காமல், ‘ஒன் மேன்’ விளையாட்டு போன்று, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார். இதனால், சொந்த கட்சியினர் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினரும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர் தலுக்கு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த, முன்னாள் அமைச்சர் முனுசாமி தலைமையில் ஐந்து பேர் குழுவை, கடந்த 15ம் தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளுடன், அக்குழு ஒரு முறை கூட பேச்சு நடத்தவில்லை.
கடந்த 21ம் தேதி டில்லி சென்ற பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து, 23ம் தேதி பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பீயூஸ் கோயல் சென்னை வந்து, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பழனிசாமியை சந்தித்தார்.
அப்போது, பா.ஜ., 27, பா.ம.க., 18, அ.ம.மு.க., 11, த.மா.கா., ஐந்து, இந்திய ஜனநாயக கட்சி இரண்டு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஒன்று, புரட்சி பாரதம் ஒன்று என, தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பெயரையும் பழனிசாமி அறிவித்தார். சொந்த கட்சியினர், கூட்டணி கட்சியினரிடம் ஆலோசிக்காமல், அமித் ஷாவுடன் மட்டும் பேசி, பழனிசாமியே இப்படி அறிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தே.ஜ., கூட்டணியில் அனைவரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. இதில், தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, ‘அ.தி.மு.க.,விடம் இன்னும் கூடுதல் தொகுதிகளை கேட்டிருக்கலாம். பா.ஜ.,வுக்கான தொகுதிகள் எவை என்பது தெரிந்து விட்டது. இனியும் கமலாலயத்தில் கூட்டம் சேரக்கூடாது; அவரவர் தங்களின் தொகுதிகளுக்கு சென்று, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும். இதை, மேலிட தலைவர்கள் கண்காணிப்பர்’ என சந்தோஷ் கூறியுள்ளார்.
‘அண்ணாமலையை போட்டியிட வைக்க வேண்டும். அவருக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி எதுவாக இருக்கும்’ என்றும, அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சை தொகுதியை தங்களுக்கு திரும்ப வழங்குமாறும், அதற்கு பதில் வேறு தொகுதியை தருவதாகவும் அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அந்த நிர்வாகி மேலும் கூறியதாவது: பா.ஜ.,வுக்கு சாதகமான 51 தொகுதிகளின் பட்டியலை, பழனிசாமியிடம் அமித் ஷா அளித்தார். அதில், இல்லாத 14 தொகுதிகள் பா.ஜ.,வுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக, சந்தோஷிடம் பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர்.
கோபமடைந்த அவர், ‘கட்சி வெற்றி பெறுவதற்கான தொகுதிகளை கேட்டு பெறாமல், தனிப்பட்ட நபர்களின் லாப, நட்ட கணக்குகளை பார்த்து, தொகுதிகளை வாங்கி இருக்கிறீர்கள். இது முட்டாள்தனமான முடிவு. திருச்செந்துார், திருவண்ணாமலை, திருவாரூர், ஆவடி, தளி தொகுதிகளில் அ.தி.மு.க., நின்றாலே வெற்றி பெற முடியாது. அங்கு நாம் எப்படி நிற்க முடியும்? வேளச்சேரி, விருதுநகரை ஏன் பெறவில்லை?’ என கேட்டுள்ளார்.
அதை தொடர்ந்து, ஆறு தொகுதிகளை மாற்றி, வேளச்சேரி, விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகளை பெற பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்காக, தேர்தல் பொறுப்பாளர் பீயூஸ் கோயல் விரைவில் பழனிசாமியை சந்திக்க இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
