மும்பையில் கேப்டன்கள் சந்திப்பு * 'இம்பேக்ட்' விதிக்கு எதிர்ப்பு

மும்பை: பிரிமியர் தொடரில் பங்கேற்கும் கேப்டன்கள் சந்திப்பு மும்பையில் நடந்தது.

பிரிமியர் கிரிக்கெட் தொடரின் 19 வது சீசன் மார்ச் 28ல் பெங்களூருவில் துவங்குகிறது. சென்னை, மும்பை உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. பெங்களூருவில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோத உள்ளது.

இதற்கு முன், 10 அணிகளின் கேப்டன்கள் சந்திப்பு மும்பையில் நடந்தது. பிரிமியர் நிர்வாகத்தினரும் பங்கேற்ற இதில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பந்து மாற்றலாமா

பனிப்பொழிவு காரணமாக, இரண்டாவது இன்னிங்சில் 10 ஓவருக்கு மேல், பந்தை மாற்றிக் கொள்ள இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கடந்த சீசனில் அனுமதி வழங்கி இருந்தது. இம்முறை, ‘முதல் இன்னிங்சின் 10 ஓவருக்குப் பின் பந்தை மாற்ற அனுமதிக்க வேண்டும்,’ என ஒரு அணியின் கேப்டன் கோரிக்கை வைத்தார். இதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

ஓவருக்கு 2 பவுன்சர் வீசுவது, பந்தில் எச்சில் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

‘இம்பேக்ட்’ எதிர்ப்பு

தவிர, கடந்த 2023ல் கொண்டு வரப்பட்ட ‘இம்பேக்ட்’ விதிக்கு பெரும்பாலான கேப்டன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2024ல் ரோகித் சர்மா கூறுகையில்,” இந்திய கிரிக்கெட்டில் ‘ஆல் ரவுண்டர்கள்’ வருவதை இது பாதிக்கும்,” என்றார். சமீபத்தில் டில்லி அணி கேப்டன் அக்சர் படேலும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

எனினும் 2027 வரை இந்த விதி தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அடுத்த ஆண்டு பி.சி.சி.ஐ., பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

முதன் முறையாக…

பிரிமியர் தொடரில் வார்ன், கில்கிறிஸ்ட், சங்ககரா, மார்கன், வார்னர், கம்மின்ஸ் பல அணிகள் பெரும்பாலும் அன்னிய வீரர்களை கேப்டனாக நியமித்தன. பின், இந்திய வீரர்கள் பலர் கேப்டனாக தேர்வாகினர். கடந்த சீசனில் ‘உள்ளூர்’ வீரர் ரஜத் படிதர், பெங்களூரு அணிக்கு முதல் கோப்பை வென்று தந்தார்.

இம்முறை கம்மின்சும் காயத்தால் அவதிப்பட ஐதராபாத் அணி கேப்டன் ஆனார் இஷான் கிஷான். இதையடுத்து பிரிமியர் தொடரில் முதன் முறையாக அனைத்து அணிக்கும் இந்திய வீரர்கள் கேப்டனாக களமிறங்க உள்ளனர்.

ஷேன் வார்னுக்கு ரூ. 460 கோடி

கடந்த 2008ல் பிரிமியர் தொடர் துவங்கியது. அப்போதைய மதிப்பில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட அணி ராஜஸ்தான் (325 கோடி). அணியின் பயிற்சியாளர், கேப்டனாக ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான், மறைந்த ஷேன் வார்ன் களமிறங்கினார். அவரது ஆண்டு சம்பளம் ரூ. 2.86 கோடியாக இருந்தது.

மறுபக்கம், சச்சின், தோனி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் மும்பை, சென்னை அணியில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆகினர். அதேநேரம், தனது சம்பளத்தை குறைத்துக் கொண்ட வார்ன், ராஜஸ்தான் அணியின் 0.75 சதவீத பங்கு உரிமையை பெற்றார். தவிர முதல் சீசனில் கோப்பை வென்று தந்தார்.

2008 முதல் 2011 வரை என வார்ன் விளையாடிய 4 ஆண்டில், பங்குத் தொகை 3 சதவீதமாக உயர்ந்தது. தற்போது ராஜஸ்தான் அணி ரூ. 15,290 கோடி, பெங்களூரு அணி ரூ. 16,706 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராஜஸ்தான் அணியில் இருந்த வார்னின் 3 சதவீத பங்கு மதிப்பு, சுமார் ரூ. 450 முதல் 460 கோடியாக உயர்ந்துள்ளது. இது அவர் வாங்கிய மொத்த சம்பளத்தை விட 50 மடங்கு அதிமாகும்.

வார்ன் 2022ல் மறைந்தார். இவரது பங்கினை தற்போது விற்பதற்கு, இந்திய கிரிக்கெட் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. இதில் கிடைக்கும் ரூ. 460 கோடி, வார்னின் மூன்று வாரிசுகள் புரூக், ஜாக்சன், சம்மர் வார்னுக்கு கிடைக்க உள்ளது.

டக்கெட்டுக்கு தடை

இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட். பிரிமியர் தொடரில் இவரை, ரூ. 2 கோடிக்கு டில்லி அணி வாங்கியது. தற்போது அவர் வெளியிட்ட அறிக்கையில்,’ இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும் என்பது சிறுவயது கனவு. வரும் சீசனில் இங்கிலாந்து அணியில் களமிறங்க முழு உடற்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வேறு வழியில்லாத நிலையில், பிரிமியர் தொடரில் இருந்து விலகுகிறேன்,’ என தெரிவித்துள்ளார்.

எவ்வித காயமும் இல்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்கான விலகியதால், இரண்டு ஆண்டு பிரிமியர் தொடரில் பங்கேற்க டக்கெட்டுக்கு தடைவிதிக்கப்படலாம்.

கம்மின்ஸ் வருகை

ஐதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் உள்ளார். கீழ் முதுகுப்பகுதி காயத்தால் அவதிப்படுவதால், வரும் சீசனில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது கம்மின்ஸ் பெங்களூருவில் உள்ள ஐதராபாத் அணியில் இணைந்துள்ளார். இதனால் வரும் மார்ச் 28ல் முதல் போட்டியில் யார் கேப்டனாக களமிறங்குவர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Source link