'ராகுலுக்கு அனுபவம் போதாது': பினராய் விஜயன்

திருவனந்தபுரம்: ”காங்., மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசிய தலைவராக இருந்தாலும் அவருக்கு அரசியல் அனுபவம் போதாது. பா.ஜ.,வின் ‘பி டீம்’ காங்., கட்சி தான்,” என, கேரள முதல்வர் பினராயி விஜயன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறியதாவது:

ராகுல் தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும், அவருக்கு அரசியல் அனுபவம் போதவில்லை. ஒரு மாநில தலைவருக்கு இருக்கும் புரிதல் கூட அவரிடம் இல்லை. எதையும் தெளிவாக புரிந்து கொள்ள அவர் முயற்சிப்பதில்லை. அனுபவத்தில் இருந்தும் அவர் பாடம் கற்றுக் கொள்வதில்லை.

இத்தகைய பண்புகள் ஒரு சிறந்த அரசியல் தலைவருக்கு அழகல்ல. காங்கிரசின் முக்கிய தலைவரிடம் இத்தனை குறைபாடுகள் இருப்பது கவலைக்குரியது.

மத்திய விசாரணை முகமைகள் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, ராகுல் கூறுகிறார். ஆனால், டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது கொண்டாடியது இதே காங்கிரஸ் தான். தற்போது கெஜ்ரிவால் விடுதலையானதால், காங்., மற்றும் பா.ஜ.,வுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.

டில்லி, ஹரியானா மற்றும் பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.,வை வீழ்த்த கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லாமல், காங்கிரஸ் தனித்து நின்றது. இதனால், அந்த மூன்று மாநிலங்களிலும் பா.ஜ., எளிதாக வென்றது.

இதை வைத்து பார்க்கும்போது, பா.ஜ.,வின் வெற்றிக்கு காங்கிரஸ் தான் மறைமுகமாக உதவி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘பா.ஜ.,வுக்கு தாளம் போடுகிறார்’

திருவனந்தபுரம்: ”பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நன்மதிப்பை பெறவே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்து வருகிறார்,” என, அம்மாநில காங்., தலைவர் சதீஷன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து சதீஷன் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியை பா.ஜ.,வின் ‘பி டீம்’ என, முதல்வர் பினராயி விஜயன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. உண்மையை சொல்லப் போனால், ஊழல் புகார்களில் மத்திய விசாரணை முகமைகளின் பிடியில் இருந்து தப்பிக்கவே, அவர் ராகுலை விமர்சித்து வருகிறார்.

கேரளாவில் கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, திருச்சூரில் சுரேஷ் கோபியை வெற்றி பெற வைக்க, கருவன்னுார் சேவை கூட்டுறவு வங்கி வழக்கை வைத்து, முதல்வரை பா.ஜ., மிரட்டியது.

பா.ஜ., தலைவர்களிடம் பினராயி விஜயன் பணிந்து விட்டார். அவர்கள் கேட்கும் எந்தவொரு காகிதத்திலும் கையெழுத்திடுகிறார்.

பி.எம்., ஸ்ரீ திட்டத்தில் கூட, சொந்த அமைச்சரவைக்கு கூட தெரியாமல் அவர் கையெழுத்திட்டதே இதற்கு சாட்சி.

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவே ராகுலையும், காங்கிரஸ் கட்சியையும் அவர் விமர்சித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link