சென்னை: சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, முதல்வர் ஸ்டாலின், வரும் ஏப்., 2ம் தேதி, திருவாரூரில் துவக்குகிறார், பிரசாரத்தை, ஏப். 21ம் தேதி கொளத்துாரில் நிறைவு செய்கிறார்.
தி.மு.க.,வின் உதய சூரியன் சின்னம் 175 தொகுதிகளில் களமிறங்குவதாக அக்கட்சி தலைவரான முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீதமுளள தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் களமிறங்குகின்றன.
இந்நிலையில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின், முதல்கட்ட பிரசாரத்தை திருவாரூரில், ஏப்., 2ல் துவக்குகிறார்.
பின், ஏப்.,3 காலை ஜெயங்கொண்டத்திலும், மாலையில் திருவெறும்பூரிலும் பேசுகிறார். ஏப்.,4 காலை கரூர், மாலை திருப்பூர்; 5ம் தேதி காலை நாகர்கோவில், மாலை திருநெல்வேலி என தினமும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதையடுத்து, ஏப்., 6ம் தேதி, சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிடுவதற்காக, முதல்வர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இதன் பின், ஏப்., 21 வரை தொடர்ச்சியாக தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொள்கிறார். தேர்தல் பிரசாரத்துக்கான, இறுதி நாளான ஏப். 21ம் தேதி காலை ஸ்ரீபெரும்புதுாரிலும், மாலையில் கொளத்துார் தொகுதியிலும் பயணம் மேற்கொண்டு, பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
