ராசிபுரம்: ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொகுதியான ராசிபுரத்தில், குழந்தைகளிடையே ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டி, இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்காலனி மற்றும் புதுக்காலனி வளவு ஆகிய பகுதிகளில், 48 ஆண்டுகளுக்கு மேலாக இரு அங்கன்வாடி மையங்கள் செயல் படுகின்றன.
48 ஆண்டுகள் புதுக்காலனி செல்லும் வழியில் ஒரு சமுதாயக் கூடம் மற்றும் இரண்டு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இரண்டு மையங்களிலும் தனித்தனியே சமையலறை, கழிப்பறை, அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் உள்ளனர்.
ஒரு மையத்தில், 15 பட்டியல் சமூக குழந்தைகளும், மற்றொரு மையத்தில், 18 பிற சமூக குழந்தைகளும் படித்து வருகின்றனர்.
கடந்த 48 ஆண்டுகளாக இவ்வாறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், மற்ற வகுப்பை சேர்ந்த குழந்தைகள் படித்த அங்கன்வாடி மையம் சேதமானபோது, தற்போதைய தி.மு.க., ஆட்சியில் இப்பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அப்போது இப்பகுதி மக்கள், புதிய கட்டடத்தில் அனைத்து குழந்தைகளையும் பாகுபாடின்றி ஒன்றாக அமர வைக்க வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், கட்டட திறப்பு விழா முடிந்து பல மாதங்களாகியும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
வேதனை இப்பகுதியை சேர்ந்த பூபதி கூறுகையில், ”நானும் இதே அங்கன்வாடியில் தான் படித்தேன். நான் படித்த காலத்திலேயே ஜாதி பாகுபாடு தெரிந்தது.
”இப்போதும் அதே நிலை நீடிப்பது வேதனையாக உள்ளது. ஒரே இடத்தில் இரண்டு ஜாதிகளுக்கு தனித்தனியே அங்கன்வாடி அமைந்திருப்பது கொடுமை. உடனடியாக இப்பிரச்னைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
இதற்கிடையே நவீன தீண்டாமை குறித்து, பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். ஆர்.டி.ஓ., சாந்தி, தாசில்தார் சசிகுமார் ஆகியோர் அப்பகுதி மக்கள், அங்கன்வாடி ஊழியர் களிடம் நேற்று விசாரணை செய்தனர்.
சாந்தி கூறுகையில், ”நிர்வாக வசதிக்காக அங்கன்வாடிகள் தனித்தனியாக உள்ளன. இதில் உள்ள குழந்தைகள், வேறு அங்கன் வாடிக்கு செல்ல விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம். மற்ற எந்த பாகுபடும் பார்ப்பதில்லை,” என்றார்.
