சென்னை: தமிழகம் – கேரளா இடையே இரண்டு வழித்தடங்களில், புல்லட் ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கோரி, ரயில்வே வாரியத்துக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் அதிவேக போக்குவரத்துக்காக, புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுதும், 17 வழித்தடங்களில், ‘புல்லட் ரயில்’ திட்டங்களை செயல் படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
முதல் கட்டமாக, மும்பை – ஆமதாபாத் வழித்தடத்தில், புல்லட் ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஹைதராபாத் – சென்னை, மைசூரு – சென்னை வழித்தடங்களில், புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழகம் – கேரளா இடையே புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இதில், சென்னை – திருச்சி – நாகர்கோவில் – திருவனந்தபுரம்; சென்னை – சேலம் – கோவை – எர்ணாகுளம் ஆகிய இரண்டு வழித்தடங்களில், புல்லட் ரயில் திட்டத்துக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது.
இதேபோல், கிழக்கு கடற்கரை சரக்கு போக்குவரத்து வழித்தடம் திட்டம், விஜயவாடாவுடன் முடிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தை, சென்னை – துாத்துக்குடி – கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இதற்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது.
