நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க., போட்டியிடுவதால், மாவட்ட செயலர் தளவாய் சுந்தரம் மீது, அக்கட்சியினர் கோபமடைந்து உள்ளனர்.
அ.தி.மு.க., தொடங்கியதில் இருந்தே, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வருகிறது.
இந்த தேர்தலிலும், இரு தொகுதிகளிலாவது அ.தி.மு.க., போட்டியிடும் என கட்சியினர் எதிர்பார்த்தனர். கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளில் அ.தி.மு.க.,வினர் களப்பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், 4 தொகுதிகள் பா.ஜ.,வுக்கும், ஒரு தொகுதி த.மா.கா.,வுக்கும் ஒதுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் மட்டும் அ.தி.மு.க., போட்டியிடுகிறது.
இதனால் அதிர்ச்சிஅடைந்த அ.தி.மு.க.,வினர், கட்சியின் மாவட்ட செயலர் தளவாய் சுந்தரத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
நாடார் சமுதாயத்தை ஒடுக்க, திட்டமிட்டு தொகுதிகளை பா.ஜ.,வுக்கு அவர் வழங்கி விட்டதாக அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டினர்.
நாகர்கோவிலின் பல பகுதிகளில், தளவாய் சுந்தரத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மாநகராட்சி மண்டல தலைவர் ஸ்ரீலிஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள், தளவாய் சுந்தரத்தின் படத்தை கிழித்தெறிந்தனர்.
கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவதாக முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன் அறிவித்துள்ளார்.
நாடார் சமுதாயத்தினர் போர்க்கொடி துாக்கியுள்ளதால், அ.தி.மு.க.,வினர் பா.ஜ.,வுடன் இணைந்து செயல்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
