வேலுவுக்கு குடைச்சலாக மாறியுள்ள விவசாயிகள், வன்னியர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை தொகுதியில், தி.மு.க.,வை சேர்ந்த வேலு, மூன்றாவது முறையாக ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் உள்ளார். இவர், ஏற்கனவே, தண்டராம்பட்டு தொகுதியில், 1984ல், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,வாக முதல்முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், 1995ல், தி.மு.க.,வில் சேர்ந்து, 2001, 2006ல், தண்டராம்பட்டு தொகுதியிலும், 2011, 2016, 2021ல், திருவண்ணாமலை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சராக இருந்து வருகிறார்.

அதன்பின், தான் சார்ந்த சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, வன்னியர் உள்ளிட்ட பிறரை அவர் கண்டு கொள்ளவில்லை என, தி.மு.க., மூத்த நிர்வாகிகளே, கட்சி தலைமையிடம் வேலு மீது புகார் பட்டியல் வாசித்துள்ளனர்.

ஆனால், தி.மு.க., தலைமையின் கஜானாவாக வேலு உள்ளதால், தலைமை அவருக்கு ஆதரவாக உள்ளது. உள்ளூர் மக்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் எளிதில் தரிசனம் செய்ய முடியாத நிலை, அவர்கள் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பது, ஆட்டோ கட்டணம் பலமடங்கு உயர்வு, வெளியூர் பக்தர்களுக்கு போதிய போக்குவரத்து வசதியின்மை என அன்றாட சிக்கல்கள் கழுத்தை நெரிப்பதால், வேலு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகளை, 2023ல் குண்டர் சட்டத்தில் அரசு கைது செய்தது. அதற்கு காரணம் வேலு தான் எனக்கூறி, விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

மேலும், காலம் காலமாக கட்சிக்கு உழைக்கும் நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டு, தன் மகன் கம்பனை வேட்பாளராக்க முயற்சிப்பது, தி.மு.க.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாயுடு மங்கலத்தில் இருந்த அக்னி கலசம் மற்றும் பா.ம.க., கொடிகளை அகற்றியபோது, அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்ற போராட்டம் நடந்தது. அந்த சம்பவம் வன்னியர் இன மக்களிடம் தீராத வடுவாக பதிந்துள்ளது.

அதுமட்டுமின்றி, தற்போது எதிரணியில், அ.தி.மு.க., – பா.ஜ.,- அ.ம.மு.க., – பா.ம.க., என கூட்டணி உள்ளதால், வன்னியர் ஓட்டுகள், அ.தி.மு.க., கூட்டணிக்கு மாறும் நிலை உருவாகி உள்ளது. ஆனால், கூட்டணியில், பா.ஜ.,வுக்கு திருவண்ணாமலை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., நேரடியாக போட்டியிடாதது, அமைச்சர் வேலுவுக்கு தெம்பை கொடுத்துள்ளது. அதேநேரம் பா.ம.க., தரப்பில், அக்னிகலசத்தை முன்னிலைப்படுத்தி, வேலுவுக்கு எதிராக வன்னிய மக்களிடம் தேர்தல் களமாட முடிவு செய்துள்ளனர்.

Source link