ராமநாதபுரம்: ஐதராபாத், மைசூருவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கோடை கால சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தாண்டு கோடை கால விடுமுறையை முன்னிட்டு 50 க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இவை பெரும்பாலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் எளிதாக சென்று வரும் வகை இயக்கப்படவுள்ளன. ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
கோடை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் பயணிகள் வருவர். இதனால் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என ராமேஸ்வரம் ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
சங்கத்தினர் கூறியதாவது: வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கோடை விடுமுறை காலத்தில் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மைசூரு, ஐதரபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் ராமேஸ்வரத்திற்கு இயக்க வேண்டும் என்றனர்.
