சில்லரை பணவீக்கம் 4 சதவீதம்; மேலும் 5 ஆண்டு மாறாத இலக்கு

புதுடில்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சில்லரை விலை பணவீக்கத்தை நான்கு சதவீதமாக ரிசர்வ் வங்கி பராமரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

நடப்பாண்டு ஏப்ரல் துவங்கி, வரும் 2031 மார்ச் மாதம் வரையிலான காலத்தில், ஆர்.பி.ஐ., இதை கடைபிடிக்க வேண்டும். இந்த இலக்கில் இரண்டு சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது, பணவீக்கம் குறைந்தபட்சமாக இரண்டு சதவீதமாகவும்; அதிகபட்சமாக ஆறு சதவீதமாகவும் இருக்கலாம்.

பணவீக்கம், தொடர்ந்து மூன்று காலாண்டுகள் இதைவிட குறைந்தாலோ, அதிகரித்தாலோ அரசுக்கு ஆர்.பி.ஐ., விளக்கமளிக்க வேண்டும்.

மத்திய அரசு கடந்த 2016 முதல், ‘பணவீக்க இலக்கு நிர்ணய’ கட்டமைப்பை பின்பற்றி வருகிறது. கடந்த 2016 அக்டோபர் முதல் 2021 மார்ச் வரை, மேற்கூறிய இதே கட்டுப்பாடு மற்றும் வரம்புகளுடன், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

பின், இது 2026 மார்ச் வரை முதல்முறையாக நீட்டிக்கப்பட்டது. தற்போது 2031 மார்ச் வரை இரண்டாவது முறையாக நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டை பொறுத்தவரை, சில்லரை விலை பணவீக்கம் ஜனவரியில் 2.74 சதவீதமாகவும்; பிப்ரவரியில் 3.21 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

ஏப்., 6,7,8ல் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டம்

Source link