புதுடில்லி: ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு

புதுடில்லி: ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் உலகளாவிய எரிசக்தி விலைகளிலிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்காகவே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைந்ததாக மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

இது குறித்து, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய நிலைமை நிச்சயமற்றதாகவே உள்ளது. நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பிரதமர் மோடியின் தலைமையில், நாட்டில் எரிபொருள், எரிசக்தி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடர்வதை அரசு உறுதி செய்து வருகிறது. ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்.

நடவடிக்கை

கடந்த காலங்களில் உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் இந்தியா தனது திறனை நிரூபித்துள்ளது. இனிவரும் காலங்களில் நாங்கள் சரியான நேரத்தில், முன்முயற்சியுடன் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்போம். முழு ஊரடங்கு குறித்து பரவி வரும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் தற்போது பரிசீலனையில் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

வதந்திகள்

இத்தகைய ஒரு காலகட்டத்தில், நாம் அனைவரும் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்பது அவசியம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், வதந்திகளைப் பரப்புவதும், தேவையற்ற அச்சச் சூழலை உருவாக்குவதும் பொறுப்பற்றதும் தீங்கு விளைவிக்கக்கூடியதும் ஆகும். கடந்த ஒரு மாத காலத்தில், சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு 70 டாலரிலிருந்து, 122 டாலர் வரை என விண்ணைத் தொடும் அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் நுகர்வோருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளன.

நிதிச்சுமை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விலைகள் 30% முதல் 50% வரையிலும், வட அமெரிக்க நாடுகளில் 30% வரையிலும், ஐரோப்பாவில் 20% வரையிலும், ஆப்ரிக்க நாடுகளில் 50% வரையிலும் உயர்ந்துள்ளன. அரசுக்கு 2 தேர்வுகள் இருந்தன. ஒன்று, மற்ற அனைத்து நாடுகளும் செய்தது போலவே மக்கள் பாதிக்கப்படும் வகையில் விலைகளை கடுமையாக உயர்த்துவது; அல்லது, சர்வதேச சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், அரசே தனது நிதிச்சுமையை ஏற்றுக்கொள்வது.

ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடங்கிய கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு கடைப்பிடித்து வரும் உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் மோடி, இந்திய மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, மீண்டும் ஒருமுறை அரசின் சொந்த நிதியில் ஏற்படும் இழப்பைத் தானே ஏற்றுக்கொள்வது என முடிவெடுத்தார். சர்வதேச விலைகள் விண்ணைத் தொடும் இக்காலகட்டத்தில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் மிக அதிகப்படியான இழப்புகளுக்கு அரசு பொறுப்பேற்றுள்ளது.

ஏற்றுமதி வரி

பெட்ரோல் மற்றும் டீசலின் சர்வதேச விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது; இதன்படி, வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் எந்தவொரு சுத்திகரிப்பு நிலையமும் இந்த ஏற்றுமதி வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட, துணிச்சலான மற்றும் தொலைநோக்குச் சிந்தனை கொண்ட இந்த முடிவிற்காக, பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.

Source link